தொலை தொடர்பு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.
இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. அஇஅதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த விடாமல் செய்து வருகின்றன. இதனால் 2 வாரத்துக்கு மேலாக பாராளுமன்றம் முடங்கி கிடக்கிறது.
இந்த சூழ்நிலையில் அஇஅதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் நெருக்கடி காரனமாக மத்திய தகவல் தொடர்பு மந்திரி ஆ. ராசா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரனை நடத்தவேண்டி தினமும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ. போலீசார், அமலாக்கப்பிரிவு மற்றும் விசாரணை குழுக்கள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
இதில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொலை தொடர்புத்துறை அதிகாரிகளிடம் விசாரணையை நடத்தினார்கள். அவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இன்று டெல்லி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
டெல்லியில் மோதிலால் நேரு மார்க்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா வீடு உள்ளது. அங்கு இன்று காலை 6 மணிக்கு 12 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்றது. 7 மணி அளவில் வீட்டுக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாக அவர்கள் சோதனையிட்டனர்.
அங்கு சோதனை தொடங்கிய அதே நேரத்தில் சென்னையிலும் சோதனைகள் தொடங்கின. சென்னை போயஸ் கார்டன் அருகே உள்ள வெள்ளாள தேனாம் பேட்டை 5-வது குறுக்குத் தெருவில் ஆ. ராசாவின் நண்பர் சாதிக் வீடு உள்ளது. இங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தபடி சோதனை நடத்துகின்றனர்.
பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் உள்ள ஆ. ராசாவின் பூர்வீக வீட்டில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வீட்டில் ஆ.ராசாவின் அண்ணன் கலியபெருமாள் வசித்து வருகிறார்.
அதுபோல லாடாபுரம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெரம்பலூர் டவுனில் உள்ள ராசாவின் அக்கா வீடு மற்றும் பெரம்பலூரில் உள்ள ஆண்டிமுத்து- சின்ன பிள்ளை அறக்கட்டளையிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். 4 இடங்களிலும் கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல டெல்லியில் உள்ள தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடந்தது.
தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, தொலை தொடர்புத்துறை ஆணைய உறுப்பினர் ஸ்ரீதர், தொலை தொடர்புத்துறை துணை டைரக்டர் ஜெனரல் ஸ்ரீவஸ்தவா, ஆ. ராசாவின் தனி செயலாளர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன .