அம்மாவுக்கு கொலை மிரட்டல் விசாரணை : உத்தரவுக்காக காத்திருக்கும் தமிழக அரசு |
அம்மாவுக்கு கொலை மிரட்டல் விசாரணை: மத்திய அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் தமிழக அரசு - அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான செல்வி ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பதட்டத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 16 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிமுக தரப்பிலிருந்து காவல்துறைக்கு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எதிர்க்கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட ஏழு கடிதங்களின் அடிப்படையில், சென்னை நகரக் காவல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு காவல் துறைத்தலைமை இயக்குநர் ஆகியோரிடம், ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் ரங்கநாதன் மற்றும் கே.பி.சுனில் ஆகியோர் 28.8.2010, 03.09.2010, 17.09.2010 (இரண்டு கடிதங்கள்) மற்றும் 24.09.2010 (மூன்று கடிதங்கள், இரண்டு புகார்கள்) ஆகிய தேதிகளில் கொடுத்த புகார்களின் பேரில், சென்னை மாநகர் கிண்டி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 506 (ii) ஆகியவற்றின் கீழ் குற்ற எண்கள் 692/2010, 709/2010, 796/2010, 823/2010 மற்றும் 824/2010-ன் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இக்கடிதங்கள் அனைத்தும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புலன் விசாரணை - உயரதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்று வந்தபோதிலும், 27-09-2010 அன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலான குழுவினர், தலைமைச் செயலாளரையும், உள்துறை முதன்மைச் செயலாளரையும் சந்தித்து, மேலும் கொலை மிரட்டல் விடுத்து மூன்று கடிதங்கள் வந்துள்ளதாகவும், இதுவரை கொடுத்த புகார்களின் மீது காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்த தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமென்றும், அனைத்து வழக்குகளையும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் ஒரு மனு அளித்தனர். அவர்கள் அளித்த கோரிக்கையை ஏற்று, இவ்வழக்குகள் அனைத்தையும் மத்திய அரசின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு 29.09.2010 அன்று தமிழக அரசு கடிதம் எழுதியது. அதனைத் தொடர்ந்து, மேலும் வந்த மிரட்டல் கடிதங்களையும், சி.பி.ஐ.-ன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு மத்திய அரசுக்கு 14.10.2010 அன்று தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், இன்று (15.10.2010) தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் பணியாளர் துறைச் செயலாளருக்கு இது சம்பந்தமாக விரைவில் ஆணை பிறப்பிக்கக் கோரி ஒரு நேர்முகக் கடிதமும் எழுதியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவருக்கு உயரிய பாதுகாப்பு அளிப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதோடு, அவருக்கு வரப்பெற்ற மிரட்டல் கடிதங்களையும் உரிய விசாரணைக்காக சி.பி.ஐ.-க்கு மாற்ற மத்திய அரசின் ஆணை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Courtesy : Nakkheeran |
No comments:
Post a Comment