அம்மாவுக்கு மிரட்டல; சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்க்கிறோம்: தமிழக அரசு விளக்கம்
சென்னை, அக். 15: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்ப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்து ஜெயா டி.வி.க்கு 7 கடிதங்கள் வந்தன. இதுதொடர்பாக, ஜெயா டி.வி.யின் துணைத் தலைவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் கிண்டி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்கள் அனைத்தும் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தன. இந்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளரை செப்டம்பர் 27-ம் தேதி சந்தித்தனர். ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மேலும் கடிதங்கள் வந்துள்ளதாகவும், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதை ஏற்று, இந்த வழக்குகள் அனைத்தையும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு செப்டம்பர் 29-ம் தேதி கடிதம் எழுதியது. அதனைத் தொடர்ந்து வந்த மிரட்டல் கடிதங்களையும் சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக, விரைவாக ஆணை பிறப்பிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேர்முகக் கடிதமும் எழுதியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அவருக்கு வரப்பெற்ற மிரட்டல் கடிதங்கள் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற மத்திய அரசின் ஆணை எதிர்பார்க்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment